PUBLISHED ON : ஏப் 19, 2026 01:00 AM

'தேர்தலுக்கான அறிகுறியே தெரியவில்லையே... இப்படி இருந்தால் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும்...' என, புலம்புகின்றனர், காங்கிரஸ் தொண்டர்கள்.
அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தன. விரைவில், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ளன.
இவற்றில், அசாம், கேரளா மாநிலங்களில், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத் தான் உள்ளது. தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மேற்கு வங்கத்தில் கடைசியாக, 1977ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
ஆனால், 'இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்வதில், கட்சியின் மேலிட தலைவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை' என, அந்த கட்சி தொண்டர்கள் குமுறுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அந்த கட்சியின் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா ஆகியோர், அசாம், கேரளாவில் ஒரு சில இடங்களில் மட்டும் பிரசாரம் செய்தனர். அதிலும், பிரியங்கா பெயரளவுக்கு தான் பிரசாரம் செய்தார். தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களின் பக்கம், அவர் எட்டிக் கூட பார்க்கவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், 'பிரியங்காவின் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்; ஆனால், பிரசாரம் செய்ய, அவருக்கு ஆர்வம் இல்லை. இந்த விஷயத்தில், பா.ஜ., தலைவர்களை பார்த்து, எங்கள் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்...' என, புலம்புகின்றனர்.

