PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

'அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது...' என, மஹாராஷ்டிர முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் குறித்து கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. 1999 - 2003 வரை, மஹாராஷ்டிராவில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி ஆட்சி நடத்தின; பா.ஜ., எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது.
அப்போது, தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார், சக்கன் புஜ்பால் ஆகியோரை கடுமையாக விமர்சித்தனர். அதிலும், தேவேந்திர பட்னவிஸ், 'அஜித் பவாரும், சக்கன் புஜ்பாலும் ஊழல் பேர்வழிகள். நான் முதல்வரானால், சக்கன் புஜ்பாலை சிறையில் அடைப்பேன்...' என, ஆவேசமாக பேசிய நிகழ்வுகள் உண்டு.
இப்போது எல்லாமே தலைகீழாகி விட்டது. பட்னவிஸ் தலைமையிலான அரசில், அஜித் பவார் துணை முதல்வராகவும், சக்கன் புஜ்பால் அமைச்சராகவும் உள்ளனர். இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சியினர், 'தேவேந்திர பட்னவிஸ் போன்ற ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியை பார்த்ததே இல்லை. சிறையில் அடைக்க வேண்டியவரை அமைச்சராக்கியது ஏன்?' என, கிண்டல் அடிக்கின்றனர்.
பட்னவிஸ் தரப்பினரோ, 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை...' என, தத்துவம் பேசுகின்றனர்.