PUBLISHED ON : மார் 13, 2026 09:42 PM

இயற்கையின் விந்தைகளில் பறவைகளின் வலசைப் பயணம் எப்போதும் வியப்பிற்குரியது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறும் பனி வாத்துக்களின் இடப்பெயர்வு, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பேரழகு நிகழ்வாகும்.




பனி வாத்துக்கள் முழுமையான தாவர உண்ணிகள். இவை தங்களின் பயணத்திற்குத் தேவையான சக்தியைப் பெற ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக உண்பதிலேயே செலவிடுகின்றன.அருகிலுள்ள வயல்களில் அறுவடைக்குப் பின் எஞ்சியிருக்கும் சோளம், கோதுமை மற்றும் புற்களை இவை உண்கின்றன. இவை செடிகளை மேலோட்டமாக மேயாமல், களிமண்ணைத் தோண்டி வேரோடு பிடுங்கி உண்ணும் தனித்துவமான பழக்கம் கொண்டவை. இவை மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியவை. சுமார் 29,000 அடி உயரத்தில் (எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்) கூட பறக்கும் திறன் கொண்டவை.
காற்றுத் தடையைக் குறைத்து ஆற்றலைச் சேமிக்க, இவை வானில் ஆங்கில எழுத்தான வி வடிவில் சீராக அணிவகுத்துச் செல்லும்.இவை எப்போதுமே ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட்டமாகவே வாழும்.
பனி வாத்துக்களின் இந்தப் பயணம் வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது அந்தப் பறவைகளின் உயிர்வாழும் போராட்டத்தையும், இயற்கையின் துல்லியமான கால சுழற்சியையும் காட்டுகிறது. மார்ச் மாத இறுதியில் போதுமான ஆற்றலைப் பெற்றவுடன், இந்த வெண்நிறப் போர்வை மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து மறைந்துவிடும்.
இவை 'நான்-ஸ்டாப்' ஆகப் பறக்க விரும்புபவைதான், ஆனால் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடக்க வேண்டியிருப்பதால் அவற்றின் 'எரிபொருள்' (உடல் கொழுப்பு) தீர்ந்துவிடும். மிடில் கிரீக் போன்ற இடங்கள் அவற்றுக்கு ஒரு 'பெட்ரோல் பங்க்' போலச் செயல்படுகின்றன. அங்கு தங்கி நன்றாகச் சாப்பிட்டுத் தங்களை மீண்டும் தயார்படுத்திக் கொள்கின்றன.
கோடைகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் முட்டையிட்டு, குஞ்சுகளைப் பொரிக்கும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வடக்கில் மீண்டும் கடும் குளிர் தொடங்கும் போது, அந்தப் பனிக்குஞ்சுகளுக்குப் பறக்கத் தெரிந்திருக்கும். அப்போது தாய், தந்தை மற்றும் புதிய குஞ்சுகள் என முழு குடும்பமாக மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பும்.-எல்.முருகராஜ்

