PUBLISHED ON : ஜூலை 28, 2025 12:00 AM

'தேர்தல் வரப் போகிறது; ஆட்சியை பிடிப்பதற்கான வழியை பார்க்காமல், தேவையில்லாத விஷயத்தை பேசி கொண்டிருக்கின்றனர்...' என, கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளைப் பற்றி ஆதங்கத்துடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது; ஆளும் கூட்டணி, பிரசாரத்துக்கு தயாராகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியிலோ, மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைமையினருக்கும் இடையே விவாதம் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கதராடை அணிவது தான் வழக்கம். இப்போதும் கேரள காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள், கதர் வேஷ்டி, சட்டை தான் அணிகின்றனர்.
ஆனால், கேரள காங்கிரசில் உள்ள இளம் தலைவர்களோ, 'ஜீன்ஸ் பேன்ட், டி - ஷர்ட்' அணியத் துவங்கியுள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன், 'பாரத் ஒற்றுமை யாத்திரை'யின் போது, ஜீன்ஸ் பேன்ட், டி - ஷர்ட் அணிந்திருந்தார். இதைப் பின்பற்றி, அந்த கட்சியின் இளம் தலைவர்களும், அது போன்ற உடைகளை அணிந்து வருகின்றனர். இதற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'கட்சியின் கலாசாரத்தையே சீர்குலைத்து வருகின்றனர்...' என, புலம்புகின்றனர்.
இளம் தலைவர்களோ, 'பழைய பஞ்சாங்கங்களின் புலம்பலை பொருட்படுத்த தேவையில்லை...' என, கிண்டலடிக்கின்றனர்.

