PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

'உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரர் தான்...' என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பார்த்து பொறாமைப்படுகின்றனர், சக பா.ஜ., தலைவர்கள்.
ஹரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன் வரை, 'இங்கு பா.ஜ., வெற்றி பெறாது; காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்...' என்று தான் பெரும்பாலானோர் கூறினர்.
இதற்கு முக்கிய காரணமாக பலரும் சுட்டிக் காட்டியது, ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை. இதனால் தான், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், மனோகர் லால் கட்டாரை மாற்றிவிட்டு, புதுமுகமான நயாப் சிங் சைனியை முதல்வராக்கியது, பா.ஜ., மேலிடம்.
ஆனாலும், 'நயாப் சிங் சைனியால் மக்களின் மனநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை; பா.ஜ., தோற்பது உறுதி...' என, அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
தேர்தல் முடிவுகள், எல்லா கணிப்பையும் தலைகீழாக புரட்டி போட்டுவிட்டன. பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனாலும்,'நயாப் சிங் சைனிக்கு முதல்வர் பதவி கிடைக்காது...' என, பா.ஜ.,வினரே கூறினர்.
இந்த பேச்சும் பொய்யாகி விட்டது. நயாப் சிங் சைனியே மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். 'இது போன்ற அதிர்ஷ்டம் ஆயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும்...' என, பெருமூச்சு விடுகின்றனர், ஹரியானா மாநில பா.ஜ.,வினர்.

