PUBLISHED ON : ஜன 19, 2026 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு, பராமரிப்பு கட்டணமாக, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், வழங்கவில்லை. இந்நிலையில், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, கால்நடை துறையில் வேலை வழங்கப்படும் என முதல்வர் இப்போது அறிவித்துள்ளது, ஏமாற்றும் செயலே!
டவுட் தனபாலு: கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை இப்போது வரை ஞாபகம் வைத்துள்ளது உங்களைப் போன்ற அரசியல்வாதிகளே... பராமரிப்பாளர்கள் இல்லை என்பது, 'டவுட்'டே இல்லாமல் தெரிகிறது. ஏனெனில் அவர்கள், ஒரு காளைக்கு மாதம், 10,000 ரூபாய்க்கு மேல் செலவிடுகின்றனர்!
----
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்: தமிழகம் முழுதும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகையுடன் பொருட்களை வழங்கும் பணியில் கூட்டுறவு பணியாளர்கள், 50,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியாவிலேயே, 2.15 கோடி பயனாளிகளுக்கு, 6,453.54 கோடி ரூபாயை ரொக்கமாக, ஒரு வாரத்துக்குள் வழங்கியது, தமிழக அரசு தான்.
டவுட் தனபாலு: அதுல எத்தனை கோடி ரூபாய், தமிழக அரசின் 'டாஸ்மாக்' மதுபான கடைகளுக்கு சென்றது என்ற புள்ளிவிபரத்தையும், அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு ஏற்படும் தானே!
----
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: வரவிருக்கும், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமரும்; பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். புதிதாக கட்சி துவங்கியவர்கள், எம்.ஜி.ஆர்., பெயரை கூறலாம். ஆனால், எம்.ஜி.ஆர்., கொடுத்த பாதையிலே, அண்ணா கொடுத்த வழியிலே, ஜெயலலிதா கொடுத்த பாதையில் செல்லும், அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்., வழி நடத்துவார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., வியூகங்களை, தி.மு.க., தகர்க்கும் வகையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கும் என கூறப்படுகிறதே... நீங்கள், புதிதாக துவக்கிய கட்சி என கூறுவது, நடிகர் விஜயை தான் என்பது, 'டவுட்' இன்றி புரிகிறது!

