PUBLISHED ON : ஜூலை 25, 2025 12:00 AM

'மனதுக்குள் பகையுடன் தான் அலைகிறார் போலிருக்கிறது...' என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், காங்கிரசின் அசோக் கெலாட் முதல்வராக இருந்தார். அப்போது, அந்த கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான சச்சின் பைலட், துணை முதல்வராக பதவி வகித்தார்.
'அசோக் கெலாட்டுக்கு வயதாகி விட்டது. முதல்வர் பதவியை என்னை போன்ற இளைஞருக்கு விட்டுத் தர வேண்டும்...' என போர்க்கொடி துாக்கினார், பைலட். தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.,வுக்கு தாவவும் அவர் தயாராக இருந்தார். சோனியா, ராகுல் போன்ற காங்., மேலிட தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.
ஆனாலும், கெலாட், பைலட் ஆதரவாளர்கள் தனித் தனி கோஷ்டியாகவே செயல்பட்டு வந்தனர். சமீபத்தில் இருவரும் ஒன்றாக சந்தித்து பேசினர். 'கெலாட் என் தந்தையைப் போன்றவர்...' என பைலட் உருகினார். பதிலுக்கு கெலாட்டும், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். பழைய பகை முடிவுக்கு வந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர்.
ஆனால், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கெலாட், 'நான் முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க, சிலர் சதி செய்தனர்...' என்றார்.
இதைக் கேட்ட பைலட் ஆதரவாளர்கள், 'பழைய பகையை கெலாட் மறக்காவிட்டால், இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியது தான்...' என, மோதலுக்கு தயாராகி வருகின்றனர்.