/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
அரசியல் பிழைத்தோரை அறக்கூண்டில் ஏற்றும் 'தினமலர்'
/
அரசியல் பிழைத்தோரை அறக்கூண்டில் ஏற்றும் 'தினமலர்'
PUBLISHED ON : டிச 12, 2025 12:00 AM

பொய் புரட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு, கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்திடவே, பேனாமுனையைக் கூர்மையாக்கிப் போரிடும் நாளிதழ்; அரசியல் பிழைத்தோரை அறக்கூண்டில் ஏற்றும் நாளிதழ் 'தினமலர்'.
அரசியலாக இருந்தாலும் சரி, ஆன்மிகமாக இருந்தாலும் சரி எந்தப் பக்கமும் சாய்வுத்தன்மை இல்லாமல் நடப்பு நிகழ்வுகளில் நடுநிலை வகித்துவரும் நாளிதழ் தினமலர் என்பதில் எள்ளளவும் பிழையில்லை. வார மலர், சிறுவர் மலர், வருடமலர் முதலிய மலர்கள் நம் சிந்தனைத் தோட்டத்தில் வாசனை நிரப்பி வருகின்றன.
தெளிந்த நீரோடை போன்ற எளிய நடையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் கருத்துக்களைத் தாங்கிவரும் பத்திரிகைகளில் தினமலர் முதன்மையானது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நல்லரசியலும், ஆன்றமைந்த கொள்கைத் தலைவர்களும் எத்துணை முக்கியமோ அத்துணை முக்கியம் அரசு இயந்திரத்தைப் பழுதில்லாமல் இயக்கிவரும் குடிமைப் பணியாளர்களும். கிராமந்தோறும், கல்லூரிதோறும், பள்ளிதோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவச் செல்வங்களை நாளைய அரசுப் பணியாளராக உயர்த்திட 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்' என்ற வழிகாட்டு நிகழ்ச்சிகளில் தினமலரோடு இணைந்து 'கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடெமி' பங்காற்றிய நாட்கள் என் நெஞ்சில் பசுமரத்தாணியாய்ப் பதிந்துள்ளன. அந்நிகழ்ச்சிகளில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (முன்னாள் ஐ.பி.எஸ்), தமிழக முன்னாள் காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. ரவி (முன்னாள் ஐ.பி.எஸ்), வருவாய்த் துறை ஆணையர் திரு. நந்தக்குமார் (ஐ.ஆர்.எஸ்) ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 'கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடெமி'யும் தினமலரும் இது போன்ற நிகழ்சிகளை தொடர்ந்து நடத்திட வேண்டும்.
'தினமலர்' வெளியிடும் மாணவர்களுக்கான தனி இதழ் 'பட்டம்', மாணவர்கள் மத்தியில் அறிவை வளர்க்கும் கருவியாக செயல்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பொது அறிவு செய்திகள் வழங்குவதில் 'தினமலர்' மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறது.
வாசகர்களின் பேராதரவோடு பவளவிழா காணும் இத்தருணத்தில், 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் பெருமதிப்பிற்குரிய திரு. டி.வி. இராமசுப்பையர் அவர்களை நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.
வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்!
என்றும் அன்புடன்,
பூமிநாதன். மு
நிர்வாக இயக்குநர்
கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

