PUBLISHED ON : மே 01, 2026 12:13 AM

'இவர்களுக்குள் நடக்கும் சண்டையால், மாநிலத்தின் நிர்வாகமே முடங்கி கிடக்கிறது...' என, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவுக்கும், அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கும் இடையே நிலவும் மோதல் குறித்து கவலைப்படுகின்றனர், பொதுமக்கள்.
ம.பி., முதல்வராக, 2023ல் மோகன் யாதவ் பதவியேற்றபோதே, 'அனுபவமில்லாதவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனரே; எப்படி சமாளிக்கப் போகிறாரோ...' என, அதிகாரிகள் வட்டாரத்தில் புலம்பல்கள் எழுந்தன.
ஆனாலும், பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல், மோகன் யாதவ் சமாளித்து வந்தார். இந்நிலையில், ம.பி., தலைமை செயலராக நியமிக்கப்பட்ட அனுராக் ஜெயினுக்கும், மோகன் யாதவுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
கலெக்டர்களை நியமிப்பதில் இருவருக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், கடந்த ஆறு மாதங்களாக எந்த மாவட்டத்துக்கும் கலெக்டர்கள் மாற்றப்படாமல் இருந்தனர்.
அனுராக் ஜெயினுக்கு, டில்லி அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு உள்ளது. இதனால், அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவித்து வந்தார், மோகன் யாதவ். நீண்ட இழுபறிக்குப் பின், சமீபத்தில் தான், கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.
அடுத்ததாக, போலீஸ் அதிகாரிகள் நியமனத்திலும், முதல்வர் மோகன் யாதவுக்கும், டி.ஜி.பி., கைலாஷ் மக்வானாவுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
இதை கேள்விப்பட்ட ம.பி., மாநில மக்கள், 'ஒரு பிரச்னை முடிந்தது என நிம்மதி பெருமூச்சு விட்டால், அடுத்த பிரச்னை துவங்கி விட்டதே...' என, புலம்புகின்றனர்.
தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி:
விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆவேசமாக, ஆக்ரோஷமாக அவர் பின்னால் கூட்டம் வருகிறது. இளைஞர்கள், மாணவ - மாணவியர் மட்டுமல்ல, நடுவயது பெண்கள் ஆதரவும் பெருகியுள்ளது. த.வெ.க., ஓட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்துதான், தமிழகத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு இருக்கும். அரசியல் வியூகம் வகுப்பதெல்லாம், அந்த அடிப்படையில தான் இருக்கும்.
'த.வெ.க., ஓட்டு வங்கியை பார்த்துட்டு, அந்த கட்சி கூட்டணிக்கு போயிடுவோம்'னு சொல்லாம சொல்றாரோ?

