PUBLISHED ON : மார் 06, 2024 12:00 AM

'தேர்தல் வந்தால் தான், தொகுதி மக்களின் ஞாபகம் வரும் போலிருக்கிறது...' என மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானியை கிண்டலடிக்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.
காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் கடந்த லோக்சபா தேர்தலில் ராகுலை எதிர்த்து களம் இறங்கினார், ஸ்மிருதி. அதற்கு முந்தைய தேர்தலில், இதே தொகுதியில் ராகுலிடம், அவர் தோல்வி அடைந்தார்.
அதனால், கடந்த தேர்தலின் போது அமேதி மக்களிடம் ஏராளமான வாக்குறுதிகளை வாரி இறைத்தார்.'நான் வெற்றி பெற்றால், ராகுல் போல் டில்லியில் முகாமிட மாட்டேன். அமேதியில் சொந்த வீடு கட்டி குடியேறுவேன்...' என்றும் கூறியிருந்தார்.
வெற்றி பெற்றதும், அமேதியின் கவுரிகஞ்ச் தாலுகாவில் உள்ள கிராமத்தில், 15,000 சதுர அடி நிலத்தையும் வாங்கினார். ஆனால், அங்கு வீடு எதுவும் கட்டவில்லை.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்குவதை ஒட்டி, சமீபத்தில் அங்கு வீடு கட்டி, சில நாட்களுக்கு முன் பால் காய்ச்சி குடியேறினார், ஸ்மிருதி.
இதைப் பார்த்த காங்., கட்சியினர், 'தேர்தலுக்காக கட்டப்பட்ட ரெடிமேட் வீடு இது...' என, கிண்டலடித்தனர்.
பா.ஜ.,வினரோ, 'ரெடிமேட் வீடோ, நிரந்தர வீடோ, தான் கூறியபடி சொந்த வீடு கட்டி விட்டார், ஸ்மிருதி. ராகுலுக்கு துணிச்சல் இருந்தால், அமேதியில் மீண்டும் போட்டியிட சொல்லுங்கள் பார்க்கலாம்...' என பதிலுக்கு கிண்டல் அடிக்கின்றனர்.

