PUBLISHED ON : டிச 03, 2025 12:32 AM

பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: அன்புமணி சதி திட்டம் தீட்டி, 2023ம் ஆண்டு பொதுக்குழுவில் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலி ஆவணங்களை வழங்கி உள்ளார். இதனால், வரும் 2026 வரை, பா.ம.க., தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பதாக தேர்தல் கமிஷன் கடிதம் வழங்கி உள்ளது. தேர்தல் கமிஷன், அன்புமணிக்கு உடந்தையாக இருக்கிறது. இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து, தேர்தல் கமிஷ னிடம் நீதி கேட்டு, டில்லியில் போராட்டம் நடத்தப்படும்.
டவுட் தனபாலு: தேர்தல் கமிஷனுக்கு அப்பா, மகன் அக்கப்போர் பற்றி எல்லாம் கவலையில்லை... அவங்களிடம் தரப்படும் ஆவணங்களின் அடிப்படையில் தான் முடிவெடுப்பாங்க... அந்த வகையில், அன்புமணி தந்தது போலி ஆவணங்கள் என்றால், நீங்க நிஜமான ஆவணங்களுடன் தேர்தல் கமிஷனை அணுகினால், கட்டாயம் நீதி கிடைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும்; தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். 'டாஸ்மாக்'கில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து, கடந்த நாலரை ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் தி.மு.க., தலைமைக்கு போயிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில், அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போய் விடுவர்.
டவுட் தனபாலு: 'டாஸ்மாக்'கில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதல் வசூல் என்பது உங்க ஆட்சியிலும் தானே நடந்துச்சு... அப்ப, அந்த பணம்- எல்லாம் யாருக்கு போனது என்ற, 'டவுட்' வருதே... அப்ப, அ.தி.மு.க., ஆட்சியில் மதுவிலக்கு துறைக்கு அமைச்சரா இருந்த தங்கமணியிடம் கேட்டால் புட்டு புட்டு வைப்பார் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
lll
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: செங்கோட்டையன், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த பிறகு, அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். எனவே, முதல்வர் அறிவுரைப்படியே, த.வெ.க.,வில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறான முடிவு.
டவுட் தனபாலு: துணை முதல்வர் உதயநிதியோ, 'அமித் ஷா சொல்லி தான், த.வெ.க.,வில் செங்கோட்டையன் சேர்ந்தார்'னு சொல்றாரு... நீங்களோ இப்படி சொல்றீங்க... 50 வருஷங்களா அரசியல்ல இருக்கும் செங்கோட்டையனுக்கு, சுயமா யோசித்து முடிவு எடுக்கத் தெரியாதுன்னு எல்லாரும் நினைச்சிட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll

