PUBLISHED ON : ஏப் 22, 2025 12:00 AM

'இது உலக அதிசயம் தான்...' என, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பற்றி பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சிவசேனா கட்சி தற்போது இரண்டாக உடைந்து, கட்சியின் கொடியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்று விட்டது. உத்தவ் தாக்கரே தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது.
சிவசேனா நிறுவனரான மறைந்த பால் தாக்கரே, தன் அரசியல் வாரிசாக, தன் சகோதரர் மகன் ராஜ் தாக்கரேயை உருவாக்கினார். பின், மன மாற்றம் ஏற்பட்டு, தன் மகன் உத்தவ் தாக்கரேயை சிவசேனா தலைவராக நியமித்தார்.
இதனால், அதிருப்தி அடைந்த ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா என்ற பெயரில் தனி கட்சியை துவக்கினார். இதுவரை ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் எலியும், பூனையுமாகவே செயல்பட்டு வந்தனர்; தேர்தல்களிலும் எதிரெதிர் அணிகளில் களத்தில் நின்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, இருவரும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 'மஹாராஷ்டிரா நலனுக்காக ராஜ் தாக்கரேயுடன் இணைந்து போராட தயார்...' என, உத்தவ் அறிவித்துள்ளார்.
'பங்காளிகள் ஒன்று சேர்வது என்பது மிகவும் அரிதான விஷயம்; நல்லது நடந்தால் சரி தான்...' என்கின்றனர், மஹாராஷ்டிரா மக்கள்.