PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

'மனிதருக்கு வயதாகி விட்டது என நினைத்தால்,அடங்க மறுக்கிறாரே...' என, ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள பா.ஜ.,வினர்.
ஒடிசாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்த பெருமை நவீன் பட்நாயக்கிற்கு உண்டு. 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராகபதவி வகித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்நடந்த சட்டசபை தேர்தலில்பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்தது; பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.அந்த கட்சியின் மோகன் மஜி முதல்வரானார்.
'நவீன் பட்நாயக்கிற்கு, 77 வயதாகி விட்டது. அவரது உடல்நிலையும்ஒத்துழைக்கவில்லை. இனி, அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாது' என, பலரும் கூறினர். பிஜு ஜனதா தளம் கட்சியினரே, இதை நம்பத் துவங்கினர்.
ஆனால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில்அமர்ந்த நவீன் பட்நாயக், ஆளுங்கட்சிக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறார். பா.ஜ., அரசின்திட்டங்கள், நடவடிக்கைகளை சட்டசபையில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது கட்சியினர் சட்டசபையை முடக்கி விடுகின்றனர்.
இதேபோல், தங்கள் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி, புதிய திட்டம் போல் பா.ஜ., செயல்படுத்துவதாக கூறி, சட்டசபைக்கு வெளியிலும் பிஜு ஜனதா தளம் கட்சியினர் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
'மூத்த அரசியல்வாதி அல்லவா; அதுதான் ஆட்டம் காட்டுகிறார்...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.