PUBLISHED ON : மார் 04, 2024 12:00 AM

'தேசிய அளவில் பெரிய தலைவராக உருவெடுத்து விடுவார் போலிருக்கிறதே...' என கர்நாடகா துணை முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சிவகுமார் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், இங்குள்ள காங்., நிர்வாகிகள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தல் முடிந்த பின், முதல்வர் பதவியை பிடிப்பதற்கு சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் கடும் போட்டி நடந்தது.
சோனியா, ராகுல் உள்ளிட்டோர் தலையிட்டு, பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கண்டனர். இந்நிலையில் தான், சமீப காலமாக சிவகுமாருக்கு தேசிய அளவிலான கட்சி விவகாரங்களில் திடீரென முக்கியத்துவம் அளித்து வருகிறது, காங்., மேலிடம்.
இதற்கு முன், எந்த மாநிலத்திலாவது காங்., கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்பட்டால், அதை தீர்த்து வைக்க, தமிழகத்தைச் சேர்ந்த மூப்பனாரை, காங்., மேலிடம் அனுப்பி வைக்கும்.
அவருக்குப் பின், குலாம் நபி ஆசாத் இந்த விவகாரத்தை கவனித்து வந்தார். இப்போது, குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு சென்று விட்டதால், சிவகுமாருக்கு அந்த பணி தரப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஹிமாச்சலில் காங்., கட்சியில் பிரச்னை ஏற்பட்டபோது, அந்த பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு சிவகுமாரை அனுப்பி வைத்தது, காங்., தலைமை.
இதைப் பார்த்த சிவகுமார் ஆதரவாளர்கள், 'எங்கள் தலைவருக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து விடுவார்...' என, பெருமை பேசுகின்றனர்.

