PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

'அதிகாரிகளை எப்போதும் நம்பக் கூடாது. சரியான நேரம் பார்த்து காலை வாரிவிடுவர்...' என விரக்தியுடன் கூறுகிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார்.
அப்போது, ஆந்திராவில் மதுபான கொள்கை வகுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், இதில், 3,200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும், ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசகராக பதவி வகித்த மூத்த அதிகாரி காசிரெட்டி என்பவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர் அளித்த வாக்குமூலத்தில், 'மாநில அரசுக்கு அதிக வருவாய் வர வேண்டும். அதே நேரத்தில், எங்கள் கட்சிக்கும் அதிக நிதி வர வேண்டும். இதற்கு தகுந்த மாதிரி ஒரு மதுபான கொள்கையை வகுக்க வேண்டும்' என, தனக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டியை இந்த வழக்கில் சேர்த்து, அவரை விசாரணைக்கு உட்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர். அடுத்த கட்டமாக அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் மூக்கை நுழைக்கும் என தெரிகிறது.
இதனால், கலக்கம் அடைந்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, 'என்னை சிறைக்குள் தள்ளாமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது...' என புலம்புகிறார்.

