
'இவரை தேசிய அளவில் அனைவருக்கும் தெரிந்த முகமாக அறிமுகப்படுத்தியதே நான்தான்; இப்போது எனக்கு எதிராகவே அரசியல் செய்கிறாரே...' என, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பற்றி கவலையுடன் கூறுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ் குமார்.
பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர். இவருக்கு முதன்முதலில் அங்கீகாரம் அளித்தது நிதிஷ் குமார்தான்; அதன்பின் தான், மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோருக்கு தொடர்பு ஏற்பட்டது.
பிரசாந்த் கிஷோர், தன் சொந்த மாநிலமான பீஹாரில், ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். அடுத்த சில மாதங்களில் இங்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், 'தற்போது பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். ஆனால், அடுத்த தேர்தலில் இந்த கூட்டணி தொடர்ந்தாலும், நிதிஷ் குமார், முதல்வராக வாய்ப்பே இல்லை.
'இந்த கூட்டணி வெற்றி பெற்றால், பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர் தான் முதல்வராவார். எனவே, நிதிஷ் குமார் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது...' என்றார்.
நிதிஷ் குமாரோ, 'தேர்தல் நேரத்தில் என் பெயரை கெடுப்பதற்காக பிரசாந்த் கிஷோர் இப்படி பேசுகிறார். வளர்த்த கடா மார்பில் பாய்கிறதே...' என, கண்ணீர் வடிக்கிறார்.