PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM

'இதற்கு மேலும் இவரை கட்சியில் வைத்திருக்க வேண்டுமா...?' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பற்றி கொந்தளிப்புடன் கேட்கின்றனர், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
கேரளாவைச் சேர்ந்த சசி தரூர், காங்கிரஸ் சார்பில் இதுவரை மூன்று முறை லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அந்த கட்சியினருடன் இணைந்து செயல்படுவதில் இவருக்கு தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.
மல்லிகார்ஜுன கார்கேவை கட்சியின் தலைவர் தேர்தலுக்கு காங்கிரஸ் மேலிடம் முன்நிறுத்தியபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர், சசி தரூர்.
அவ்வப்போது மத்திய அரசுக்கு ஆதரவாக இவர் பேசுவதும், காங்கிரசுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
'மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வியால் தான் இந்த தாக்குதல் நடந்தது...' என, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
சசி தரூரோ, 'எந்த நாட்டிலும் உளவுத்துறை துல்லியமான தகவல்களை அளிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவது சரியல்ல...' என்றார்.
இதனால் கடும் கோபம் அடைந்த காங்., பிரமுகர்கள், 'சசி தரூர் பா.ஜ.,வில் இணைந்து விடுவது நல்லது. காங்கிரசின் கொள்கைகளுக்கும், அவருக்கும் சரிப்பட்டு வராது. அவர் பா.ஜ.,வின் தீவிர விசுவாசி. அவரை கட்சியை விட்டு உடனடியாக நீக்க வேண்டும்...' என, குமுறுகின்றனர்.

