PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

'இனியும் இவரை கட்சியில் வைத்திருப்பது தற்கொலைக்கு சமம்...' என, காங்கிரஸ் லோக்சபா எம்.பி., சசி தரூர் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததும், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2022ல் நடந்தது. இதில், சோனியா குடும்பத்தின் ஆதரவுடன் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டார்.
அப்போது அவரை எதிர்த்து, சசி தரூர் போட்டியிட்டது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது; அந்த தேர்தலில், சசி தரூர் தோல்வி அடைந்தார்.
சமீபகாலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் சசி தரூர் பாராட்டி பேசி வருகிறார். இது, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு விளக்கி கூறுவதற்காக செல்லும், எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களில், ஒரு குழுவுக்கு தலைவராக சசி தரூரை மத்திய அரசு நியமித்துள்ளது.
'நாங்கள் பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெறாத ஒருவருக்கு எப்படி இந்த குழுவில் இடமளிக்கலாம்' என, காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
'கட்சியை காட்டி கொடுப்பதும், துரோகம் செய்வதும் தான் சசி தரூரின் வேலை. அவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்...' எனவும், காங்., நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.