PUBLISHED ON : அக் 15, 2024 12:00 AM

'மழை விட்டும் துாவானம் விடாத கதையாகஇருக்கிறதே...' என கவலைப்படுகிறார், மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
கோல்கட்டாவில் உள்ள, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மிகவும் பழமையானது. இங்கு படித்து வந்த பயிற்சி மாணவி ஒருவர், கடந்த ஆகஸ்டில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கியஇந்த சம்பவத்துக்கு நீதிகேட்டு, சக டாக்டர்கள்போராட்டம் நடத்தினர்;இது, மம்தாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், இந்த விஷயத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
'இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, உச்ச நீதிமன்றமும் மாநில அரசை கடுமையாக சாடியது. தொடர் பேச்சுக்கு பின், டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனாலும், மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவது, மம்தாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
திரிணமுல் காங்கிரசில் உள்ள சில நிர்வாகிகளே,மறைமுகமாக இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவதாக கிடைத்த தகவல், மம்தாவை கொதிப்படைய வைத்துள்ளது.
'கட்சிக்காரர்களுக்காக எவ்வளவு தியாகம் செய்துள்ளேன். சோதனை காலத்தில் எனக்கு துணை நிற்காமல், என் அரசியல் வாழ்க்கையை காலி செய்ய துடிக்கின்றனரே...' என புலம்புகிறார், மம்தா.

