PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

‘இவருக்குள் இவ்வளவு திறமைகளா...?’ என கேரள மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சதீசனை பாராட்டுகின்றனர், அங்குள்ள மக்கள்.
கேரளாவில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முதல்வர் பதவியை பிடிப்பதற்கு, அந்த கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் தொண்டர்களிடையே இருந்த செல்வாக்கு காரணமாக, சதீசனுக்கு முதல்வர் பதவி கிடைத்தது.
அரசியல், கட்சி விவகாரம் என ஒரு பக்கம் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், மற்றொரு பக்கம் பல்வேறு துறைகளிலும் சதீசனுக்கு உள்ள ஈடுபாடு, கேரள மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சதீசன் எழுத்தாற்றல் மிக்கவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில், கிறிஸ்துவ மதம் பற்றி அவர் எழுதிய புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது, சமையல் கலையிலும் சதீசன், சமர்த்தர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிலும், மத்தி என கூறப்படும் ஒரு வகை மீனை எப்படி ருசியாக சமைப்பது என்ற சமையல் குறிப்பை, சமீபத்தில் ஒரு பேட்டியில் சதீசன் விளக்கியிருந்தார்.
‘அதிக எண்ணெய் ஊற்றாமல், மண் சட்டியில் மசாலா தடவிய மத்தி மீன்களை அடுக்கி, அவற்றின் மீது கறிவேப்பிலையை அடர்த்தியாக பரப்பி சமைக்க வேண்டும்’ என அவர் கூறியது, இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதை பார்த்துவிட்டு, ‘சகலகலா வல்லவராக இருக்கிறாரே சதீசன்...’ என, கேரள மக்கள் கூறுகின்றனர்.
