PUBLISHED ON : மார் 22, 2026 02:35 AM

'விசுவாசம் இல்லை; ஆனால், பதவி மட்டும் வேண்டுமா...?' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூரை பார்த்து கொந்தளிக்கின்றனர், அந்த கட்சியின் கேரள மாநில நிர்வாகிகள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம், 9ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் வரிந்து கட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன், ஜோசப் உட்பட பலர், முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளனர்.
இந்த போட்டியில், காங்கிரஸ் லோக்சபா எம்.பி., சசி தரூம், தானாக வந்து குதித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மத்திய பா.ஜ., அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக சசி தரூர் பேசி வருகிறார்; இது, காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 'கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நான் முதல்வராவேன் என்று சிலர் கூறுகின்றனர்...' என, சமீபத்தில் தெரிவித்திருந்தார், சசி தரூர்.
இதனால் கடுப்பான கேரள காங்கிரஸ் நிர்வாகிகள், 'கேரளாவில் பா.ஜ., வெற்றி பெற்றால், சசி தரூர் முதல்வராகலாம்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
