PUBLISHED ON : அக் 28, 2024 12:00 AM

'தேர்தல் நடந்து முடிந்ததும் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பான காட்சிகள் அரங்கேறப் போவது உறுதி...' என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், மஹாராஷ்டிரா மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம், 20ல் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில், இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எதிர்தரப்பில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா ஆகியவை கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இரண்டாக பிரிந்து, எதிர் எதிர் அணியில் இருப்பதால், போட்டியும், பகையும் அதிகமாக உள்ளது.
ஆளுங்கட்சி கூட்டணியிலும் சரி, எதிர்க்கட்சி கூட்டணியிலும் சரி... எல்லா கட்சிகளுமே முதல்வர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றன.
எதிர்க்கட்சி கூட்டணியில் உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவிக்கு குறிவைத்து உள்ளார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் முதல்வர் பதவியை எதிர்பார்க்கின்றனர்.
மஹாராஷ்டிரா மக்களோ, 'ஒரு பதவிக்கு இத்தனை பேர் போட்டியா; நமக்கு நன்றாக பொழுது போகும் போலிருக்கிறதே...' என, குஷியாக இருக்கின்றனர்.