PUBLISHED ON : அக் 13, 2024 12:00 AM

'டில்லி அரசியலில் என்ன நடக்குது என, யாருக்குமே தெரியவில்லை; புரியவும் இல்லை...' என, குழப்பத்துடன் கூறுகின்றனர், அங்குள்ளபொதுமக்கள். இங்கு, முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
ஏற்கனவே முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கியதால், பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு டில்லியில் ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்தார்; ஆனால், சாவியை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை.
கெஜ்ரிவாலுக்கு பின் முதல்வராக பதவியேற்ற ஆதிஷி, அந்த பங்களாவில்குடியேறினார். ஆனால், 'எங்களின் அனுமதிஇல்லாமல் எப்படி இங்கு குடியேறலாம்...' என கூறிய அதிகாரிகள், அந்த பங்களாவுக்கு, 'சீல்' வைத்தனர். இது தொடர்பானசெய்திகள் பரபரப்பாக வெளியாகவே, நாடு முழுதும் ஆதிஷி குறித்து பேசப்பட்டது.
ஆனால், ஆம் ஆத்மியில் உள்ள ஆதிஷிக்கு எதிர் கோஷ்டியினரோ, 'இந்த சம்பவத்தின் பின்னணியில்மிகப்பெரிய விளம்பர அரசியல் உள்ளது...' என்கின்றனர்.
'அரசு பங்களாவில் குடியேறவும், காலி செய்யவும்உரிய விதிமுறைகள் உள்ளன; இதுகுறித்து ஆதிஷிக்கு நன்றாக தெரியும். அப்படியிருந்தும், விதிமுறைகளை பின்பற்றாமல், அரசு பங்களாவில்குடியேறியது, ஆக்கிரமிப்புக்கு சமம்தானே. கெஜ்ரிவாலைவிட, தன்னை பெரிய தலைவராக காட்டிக் கொள்ள ஆதிஷி விரும்புகிறார்...' என்கின்றனர்.
ஆதிஷி தரப்பினரோ, 'முதல்வர் பதவி கிடைக்காத வயிற்றெரிச்சல் கோஷ்டிதான், இந்த கட்டுக்கதையை பரப்புகிறது...' என்கின்றனர்.