PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

'இவர் முடிவெடுப்பதற்குள் அடுத்த சட்டசபை தேர்தலே வந்து விடும் போலிருக்கிறது...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள எதிர்க்கட்சியினர்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை போலவே சந்திரபாபு நாயுடுவுக்கும், தன் வாரிசை உயர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
ஏற்கனவே இவர் முதல்வராக இருந்தபோதே, இவரது மகன் நர லோகேஷுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார். தற்போது மீண்டும் ஆட்சியை பிடித்ததும், தன் மகனுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் ஆகிய முக்கியமான துறைகளை ஒதுக்கியுள்ளார்.
ஆனால், சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரோ, 'உங்களுக்கு வயதாகி விட்டது. இப்போதே நர லோகேஷை முதல்வர் பதவியிலோ, துணை முதல்வர் பதவியிலோ அமர்த்திவிட்டு, நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீவிர அரசியலில் இருந்து விலகி விடுவது நல்லது...' என, கூறி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடுவோ, 'மகனுக்கு உடனடியாக முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி கொடுத்தால், வாரிசு அரசியல் என எதிர்க்கட்சியினர் அழுத்தம் திருத்தமாக முத்திரை குத்தி விடுவர். கொடுக்காவிட்டால், குடும்பத்தினர் நச்சரிப்பு தாங்க முடியாது. என்ன செய்யலாம்...' என, தீவிரமாக யோசித்து வருகிறார்.
'வாரிசு அரசியல் கலாசாரத்தில் சந்திரபாபு இணைந்து பல ஆண்டுகளாகி விட்டன. இப்போது யோசித்து என்ன ஆகப் போகிறது...' என கேட்கின்றனர், ஆந்திர மக்கள்.