PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

'மூத்த அரசியல்வாதியான இவர், இவ்வளவு தடுமாறுகிறாரே...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அம்மாநில மக்கள்.
கடந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில், சந்திரபாபு நாயுடுவின் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
சந்திரபாபு நாயுடு, இதற்கு முன் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். ஆனால், இந்த முறை முக்கிய முடிவுகளை எடுப்பதில், அவர் அவசரப்படுவதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலையை தனியார்மயமாக்க போவதாக பேசப்பட்டு வந்தது. சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசாகப்பட்டினம் ஆலையை தனியார்மயமாக்குவதை எதிர்ப்போம்...' என, சந்திரபாபு நாயுடு முழங்கினார்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும், மாற்றி பேசத் துவங்கி விட்டார். 'ஆலையை தனியார் மயமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...' என, அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சமீபத்தில் வாய் திறந்தார்.
இதேபோல், திருப்பதி லட்டு விவகாரத்திலும் சந்திரபாபு நாயுடு அவசரப்பட்டு விட்டதாக, அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
'மூத்த அரசியல்வாதியான சந்திரபாபு நாயுடு, உணர்வுப்பூர்வமான விஷயங்களை சற்று நிதானமாகஅணுகியிருக்கலாம்...' என்கின்றனர், ஆந்திர மக்கள்.