தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/ ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை


PUBLISHED ON : ஜன 12, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 12, 2026 06:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது மறக்கமுடியாத மறக்கக்கூடாத கறுப்பு நாளாகும்.

1026 ஆம் அண்டு ஜனவரி மாதம், கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றான்.

ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து, அக்கற்களை தனது தாயகமான ஆப்கனிஸ்தானில் உள்ள கஜினி நகருக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தான். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளையும் கொள்ளயைடித்துச் சென்றான்.Image 1520863கஜினிமுகமதுவின் கண்களை உறுத்தும் அளவிற்கு சோமநாதபுரம் கோவிலில் அத்தனை சிறப்புகள் இருந்தன.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், சௌராஷ்டிர கடற்கரையில் அமைந்துள்ள சோமநாதபுரம் கோயில், பாரதத்தின் மிகத் தொன்மையான மற்றும் எழுச்சிமிக்க ஆன்மீக அடையாளமாகும். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானதாகத் திகழும் இக்கோயில், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.இங்கே சிவன் லிங்க வடிவில் இருக்கிறார்,இவரே சோமநாதர் ஆவார்,இவரது பெயரிலேயே சோமநாதர் கோவில் அமைந்துள்ளது.

சோமநாத் கோயில் 3 அடுக்குகளைக் கொண்டது. இதன் பிரதான கோபுரம் (ஷிகரம்) 155 அடி உயரம் கொண்டது. கோபுரத்தின் உச்சியில் உள்ள 'கலசம்' மட்டும் 10 டன் எடை கொண்டது. கோயில் வளாகம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிரதான கோயில் கட்டிடம் சுமார் 200 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டது.'கைலாச மகா மேரு பிரசாத்' பாணியில் கட்டப்பட்டது.

கோயிலின் தெற்குப் பகுதியில் ஒரு தூண் உள்ளது. இதிலிருந்து நேர்க்கோட்டில் பார்த்தால் அண்டார்டிகா வரை இடையில் நிலப்பரப்பே கிடையாது. இது அந்தக்கால இந்தியர்களின் கடல்சார் அறிவியலுக்குச் சான்று.

சோமநாதர் கோயில் அதன் அளவற்ற செல்வத்திற்காகவும், ஆன்மீகப் பெருமைக்காகவும் வரலாற்றில் பலமுறை அந்நியப் படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது:

1026-இல் கஜினி முகமது இக்கோயிலைத் தரைமட்டமாக்கிய பிறகு அலாவுதீன் கில்ஜி (1296), முசாபர் ஷா (1375), முகமது பேக்டா (1451) மற்றும் அவுரங்கசீப் (1701) போன்ற ஆட்சியாளர்களால் இக்கோயில் மீண்டும் மீண்டும் இடிக்கப்பட்டது.

கோயில் இடிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும், இந்திய மன்னர்கள் அதனை மீண்டும் மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டியெழுப்பினர். வல்லபீபுர யாதவ மன்னர்கள், பிரதிஹர குல மன்னன் இரண்டாம் நாகபாதர், மாளவ நாட்டு போஜராஜன் மற்றும் இந்தூர் ராணி அகல்யாபாய் ஹோல்கர் போன்றோர் இக்கோயிலை மீட்டெடுத்த வரலாற்று நாயகர்கள் ஆவர்.

நவீன இந்தியாவில், சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப சர்தார் வல்லபாய் படேல் மற்றும் கே.எம். முன்ஷி ஆகியோர் பெரும் முயற்சி எடுத்தனர். பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டு, 1950-இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1951-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அஸ்திவாரக் கல் நடப்பட்டது. இறுதியாக, 1995-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தலைமையில் இக்கோயில் முறைப்படி பொதுமக்களின் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 'சோமநாதர் சுயமரியாதை பெருவிழா' மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு உள்ளது.

1026 ல் கஜினி முகமதுவால் இக்கோயில் மீது நடத்தப்பட்ட முதல் பெரும் தாக்குதலின் 1000-வது ஆண்டையும், 1951-இல் கோயில் மீளுருவாக்கம் செய்யப்பட்டதன் 75-வது ஆண்டையும் நினைவுகூரும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.Image 1520862ஸ்ரீ சோமநாத் அறக்கட்டளையின் தலைவரான பிரதமர் மோடி, இந்த விழாவில் பங்கேற்று 'வீர யாத்திரை' எனும் ஊர்வலத்தை வழிநடத்தினார். இது கோயிலைக் காக்க உயிர் தியாகம் செய்த வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக அமைந்தது.

விழாவின் ஒரு பகுதியாக, சோமநாதரின் வரலாற்றை விளக்கும் 3,000 ட்ரோன்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான ட்ரோன் காட்சி வானில் நிகழ்த்தப்பட்டது.கோயில் வளாகத்தில் 72 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற 'ஓம்கார மந்திர பாராயணம்' மற்றும் சிறப்புப் பூஜைகளில் பிரதமர் கலந்துகொண்டார். சோமநாதர் கோயில் வளாகம் உலகத்தரம் வாய்ந்த ஆன்மீகத் தலமாக மாற்றப்பட்டு வருகிறது.

சோமநாதபுரம் கோயில் என்பது வெறும் கற்களால் ஆன கட்டிடம் அல்ல; அது காலத்தை வென்று நிற்கும் இந்திய நாகரிகத்தின் 'சுயமரியாதை' மற்றும் 'எழுச்சியின்' அடையாளம். பிரதமர் மோடி குறிப்பிட்டது போல, இது 'ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை' ஆகும்.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us