PUBLISHED ON : மார் 18, 2026 01:52 AM

'ஒரே குழப்பமாக இருக்கிறதே...' என, கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் புலம்புகின்றனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் உள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஏப்., 9ல் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
'முதல்வர் பினராயி விஜயனுக்கு, 80 வயதாகி விட்டதால், இந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றாலும், அவர் முதல்வராக மாட்டார்; அந்த கட்சியின் வேறு ஒரு முக்கிய தலைவரே முதல்வராவார்...' என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. 'இதனால், அவர் இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார்' என்றும், தகவல்கள் பரவின.
ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், 81 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது; அதில், முதல்வர் பினராயி விஜயன் பெயரும் இடம் பெற்றிருந்தது. கண்ணுார் மாவட்டம் தர்மடம் தொகுதியில், பினராயி விஜயன் மீண்டும் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், பினராயி விஜயன் தான் மீண்டும் முதல்வர்...' என, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கூறி வருகின்றனர்.
