PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

'இவரது நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறதே...' என, சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர்உத்தவ் தாக்கரே மீது சந்தேக பார்வை வீசத் துவங்கியுள்ளனர், மஹாராஷ்டிர அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறி, அந்த கட்சியை கைப்பற்றிய ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார்.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், ஏக்நாத் ஷிண்டேயால் முதல்வர் பதவியை தக்க வைக்க முடியவில்லை. பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அந்த கட்சியின் தேவேந்திர பட்னவிசுக்கு முதல்வர் பதவியை, ஷிண்டே விட்டுக் கொடுக்க நேர்ந்தது.
இந்த நிலையில் தான், நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சிறப்பாக செயல்படுவதாக கூறி, அவரை பாராட்டி, தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில் கட்டுரை எழுதியுள்ளார், உத்தவ் தாக்கரே.
இது, மஹாராஷ்டிரா அரசியல்வாதிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 'எதிர்க்கட்சியினரை உத்தவ் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டாரே; காங்கிரசை கழற்றிவிட்டு, மீண்டும் பா.ஜ.,வுடன் கைகோர்க்க தயாராகிறாரோ... கூட்டணி கணக்கு மாறுதே...' என, குழப்பத்தில் உள்ளனர் மஹாராஷ்டிர அரசியல்வாதிகள்.