PUBLISHED ON : ஜூன் 22, 2026 01:12 AM

'பதவி ஆசை மட்டும் இவருக்கு போகவே போகாது போலிருக்கிறது...' என, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிறுவனருமான தேவ கவுடா பற்றி கிண்டல் அடிக்கின்றனர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பிரதமர், கர்நாடக முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த தேவ கவுடாவுக்கு, இப்போது, 93 வயதாகிறது.
தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள தேவ கவுடாவின் பதவிக் காலம், இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. கர்நாடக சட்டசபையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு, ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்யும் அளவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் இல்லை.
கூட்டணி கட்சியான பா.ஜ.,வும், தேவ கவுடாவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டது. இதனால், மீண்டும் எம்.பி.,யாக முடியாத நிலையில் உள்ளார் தேவ கவுடா.
சமீபத்தில், கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்த பழ கண்காட்சியை பார்வையிட்ட தேவ கவுடா, 'மத்திய, மாநில அரசுகள் மாம்பழத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, பலாப்பழத்துக்கு அளிக்கவில்லை. பலாப்பழ விற்பனையை ஊக்குவிக்க, தனி வாரியம் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்றார்.
இதைக் கேட்ட எதிர்க்கட்சியினர், 'ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; பலாப்பழ வாரியத்துக்கு தலைவராகி விடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது...' என, தேவ கவுடாவை கிண்டல் அடிக்கின்றனர்.
