PUBLISHED ON : நவ 17, 2025 12:00 AM

'ஆரம்பத்தில் வீம்பு பிடிக்கும் போதே கழற்றி விட்டிருக்க வேண்டும். இப்போது புலம்பி என்ன பயன்...' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை தேற்றுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்ற எதிர்க்கட்சி கூட்டணி, படுதோல்வியை சந்தித்தது. அந்த கூட்டணி, மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், 35ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும், காங்கிரஸ் கட்சி, 61ல் போட்டியிட்டு, வெறும், 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
முன்னதாக, கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடந்தபோது, 90க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டு, காங்கிரஸ் தலைவர்கள் அடம் பிடித்தனர். பேச்சில் இழுபறி ஏற்பட்டதால், வேறு வழியில்லாமல், இறுதியில் அந்த கட்சிக்கு, 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தற்போது, தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, 'கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம் பிடித்த காங்கிரசை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டிருந்தால், நாம் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, கவுரவமான வெற்றியை பெற்றிருக்கலாம். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது நம் தப்பு தான்...' என, தேஜஸ்வி யாதவை தேற்றுகின்றனர், அவரது கட்சியினர்.

