PUBLISHED ON : நவ 16, 2025 12:32 AM

'இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக மக்களை நம்ப வைத்திருந்தார். ஒரே தேர்தலில் அம்பலப்பட்டு நிற்கிறார்...' என, பீஹாரின் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரஷாந்த் கிஷோரை பார்த்து, கிண்டல் அடிக்கின்றனர், பிற கட்சிகளின் அரசியல்வாதிகள்.
பிரஷாந்த் கிஷோர், அரசியல் கட்சி துவக்குவதற்கு முன், தேர்தல் வியூக நிபுணராக இருந்தார். பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்களில், வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
இதில் பல தேர்தல்களில், அவரால் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கப்பட்ட கட்சிகள் ஆட்சி அமைத்தன. இதனால், 'குறுகிய காலத்துக்குள் ஆறு பேரை முதல்வர் பதவியில் அமர்த்திக் காட்டிய சாணக்கியன்...' என, பலரும் அவரை புகழ்ந்து பேசினர்.
இதையடுத்து, பிரஷாந்த் கிஷோருக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டது. தன் சொந்த மாநிலமான பீஹாரில், ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி, சட்டசபை தேர்தலை சந்தித்தார்.
'பல கட்சிகளை ஆளும் கட்சியாக மாற்றியவர், இப்போது தன் கட்சியை ஆளும் கட்சியாக்கப் போகிறார்...' என, அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 'முதல்வர்களை உருவாக்கிய, 'கிங் மேக்கருக்கு' வந்த சோதனையை பாருங்கள்...' என, மற்ற கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.

