PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது, முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கிய கம்யூனிஸ்ட்கள், நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து, இப்போது இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டனர். அந்த அளவுக்கு கட்சியை, 'வளர்த்ததில்' முந்தைய தலைவர்கள் பலருக்கும் பங்கு உண்டு.
இந்நிலையில், தலைநகர் டில்லியில், இந்திய கம்யூனிஸ்ட் என்றால், 'ராஜா' என, தமிழக எம்.பி.,க்கள் சொல்லும் அளவுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலராக உள்ள ராஜா விளங்குகிறார். காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியினர் டில்லியில் நடத்தும் எந்த கூட்டத்திலும் பங்கேற்க அவர் தவறுவதில்லை. அழைத்தாலும், அழைக்கா விட்டாலும் சரி... எல்லா கூட்டங்களிலும், முதல் ஆளாக பங்கேற்பார்.
இதை பார்க்கும் புதிய எம்.பி.,க்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, பார்லிமென்டில் ஏகப்பட்ட எம்.பி.,க்கள் இருப்பர் என எண்ணுவர். ஆனால், இந்திய கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகளை சேர்த்தே, லோக்சபா எம்.பி.,க்களின் எண்ணிக்கை ஆறுக்குள் தான் உள்ளது.
எனினும், முக்கிய எதிர்க்கட்சி போல பந்தா செய்வதில் மட்டும் ராஜா, எந்த குறையும் வைத்ததில்லை. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், டில்லியில் தமிழ் பேசும் முகம் என்பதால், தமிழக எம்.பி.,க்கள் மத்தியில் எப்போதும் பிரபலம்.
இதனால், ராஜாவிடம் பிற மாநிலத்தவர்கள் எப்போதும், 'உர்ர்...' என்று தான் இருப்பர். 'இந்த நிலையை மாற்றுவேன்' என்பதே, ராஜாவின் தற்போதைய கொள்கையாக உள்ளது.

