PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

'நேரு குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையும் அரசியலுக்கு வந்து விடும் போலிருக்கிறதே...' என,காங்கிரஸ் தலைவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேருவைத் தொடர்ந்து, அவரது மகள் இந்திராஅரசியலுக்கு வந்தார். அதன்பின், இந்திராவின்மகன்கள் சஞ்சயும், ராஜிவும் அரசியலுக்குள்அடி எடுத்து வைத்தனர்.
ராஜிவுக்குப் பின், அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோரும் அரசியலில்தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றனர். ராகுல், லோக்சபா எம்.பி.,யாகவும், பிரியங்கா, காங்., பொதுச் செயலராகவும் உள்ளனர்.
பிரியங்காவின் மகன் ரேகனுக்கு, 24 வயதும், மகள் மிரயாவுக்கு, 22 வயதும் ஆகிறது. இவர்கள் இருவரும் குடும்ப நிகழ்ச்சிகள் தவிர, வேறு எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தனர்.
ஆனால், சமீபத்தில் கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, தங்களின் தாய் பிரியங்காவுக்காக,இவர்கள் இருவரும் சில இடங்களில் பிரசாரம் செய்தனர்.
பிரியங்காவின் பிரசாரத்தின்போது, கூட்டத்தில் ஒரு ஓரமாக இவர்கள் இருவரும் நின்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்; சில இடங்களில் பிரியங்காவுடன் சேர்ந்து, இவர்களும் பிரசாரம் செய்தனர்.
இதைப் பார்த்த கேரள மாநில காங்., நிர்வாகிகள்,'இப்போதே அரசியல் பயிற்சி கொடுத்தால் தான், எதிர்காலத்தில் தலைவர்களாக உருவெடுக்க முடியும் என்பதால், பிரியங்கா தன் குழந்தைகளை களத்தில் இறக்கி விட்டுள்ளார் போலிருக்கிறது...' என, முணுமுணுத்தனர்.