PUBLISHED ON : செப் 02, 2026 12:00 AM

'அரசியல் களத்தில், தன் மகன் நிகில் குமார சாமியை நிலைநிறுத்தி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்...' என, மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவருமான குமாரசாமி குறித்து பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தில், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் இளைய மகன் குமாரசாமி, அவரது அரசியல் வாரிசாக வலம் வருகிறார். தனக்கு பின், தன் மகன் நிகிலை அரசியலில் வளர்த்தெடுக்க, குமாரசாமி போராடி வருகிறார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் நிகிலை, குமாரசாமி நிறுத்தினார். அப்போது, பா.ஜ., வேட்பாளரிடம் நிகில் தோல்வி அடைந்தார்.
அடுத்து, 2023 சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியில் நிகில் நிறுத்தப்பட்டார்; இதிலும் தோல்வி அடைந்தார். பின், 2024ல் சென்னப் பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிகில், அங்கும் தோல்வியை தழுவினார்.
இதையடுத்து, கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரச்னைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் பாதயாத்திரை மேற்கொண்டு, மக்களை சந்திக்கும்படி நிகிலை, குமாரசாமி அனுப்பி வைத்துள்ளார்.
கர்நாடக மக்களோ, 'அரசியலில் ராசியில்லாதவர் என்ற முத்திரை மகன் மீது பதிந்துவிடக் கூடாது என்பதற்காக, குமாரசாமி ரொம்பவே மெனக் கெடுகிறார்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
