
'இவரது அசுர வளர்ச்சியை பார்த்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது...' என, வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிப்லப் குமார் தேவ் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அந்த கட்சியின் சக தலைவர்கள்.
பிப்லப் குமார் தேவின் சொந்த மாநிலம், திரிபுரா தான். ஆனால், பெரும்பாலும் டில்லியில் தான் இருந்தார். கடந்த, 2015ல் இவரை திரிபுராவுக்கு அனுப்பி வைத்தது, பா.ஜ., மேலிடம்.
அதுவரை, இந்த மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை. தீவிரமாக களத்தில் இறங்கிய பிப்லப் குமார் தேவ், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பா.ஜ.,வில் இணைத்தார்.
இதனால், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., முதல் முறையாக திரிபுராவில் ஆட்சியை பிடித்தது. பிப்லப் குமார் தேவுக்கும் முதல்வர் பதவி கிடைத்தது. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யானார்.
தற்போது அவரை, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கான பொறுப்பாளராக நியமித்துள்ளது, பா.ஜ., மேலிடம்.
'இடதுசாரி கட்சி கோலோச்சிய திரிபுராவில், பா.ஜ., கொடி பறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், பிப்லப் குமார் தேவ். இப்போது, மேற்கு வங்க மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடக்கும் மம்தா பானர்ஜியின் ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ., ஆட்சி அமைய கடுமையாக உழைப்பார். கண்டிப்பாக, மேற்கு வங்கத்தில் தாமரை மலரும்...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.