
'கடுமையான போட்டி இருந்தாலும், எப்படியும் இவருக்கு பதவி கிடைத்து விடும்...' என்ற நம்பிக்கையில் உள்ளனர், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரின் ஆதரவாளர்கள்.
பா.ஜ., இளைஞர்அணி தலைவராகஇருந்த அனுராக் தாக்குர், மோடி தலைமையிலானமுந்தைய அரசில், செல்வாக்கு மிக்க மத்திய அமைச்சராகவலம் வந்தார். ஆனால்,ஆறு மாதங்களுக்கு முன் நடந்த லோக்சபாதேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்த போது, மோடிஅமைச்சரவையில், அவரது பெயர் இடம்பெறவில்லை.
இது, அனுராக் தாக்குருக்கு மட்டுமல்ல; கட்சியின் மூத்த தலைவர்களுக்கே ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 'கடந்த முறை சிறப்பாக செயல்பட்டவர்; சுறுசுறுப்பாக பணியாற்றும் திறன் படைத்தவர். அவரை அமைச்சரவையில் ஓரம் கட்டியது சரியல்ல...' என்ற பேச்சும் எழுந்தது.
இந்த நிலையில், தற்போது பா.ஜ., தேசியதலைவராக பதவி வகிக்கும் நட்டாவின் பதவிக் காலம் முடிந்துள்ளதால், அவருக்கு பதிலாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 'இந்த பதவி அனுராக் தாக்குருக்கு கிடைக்கும்' என, டில்லி பா.ஜ., வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
இதைக் கேட்டு தெம்பாகியுள்ள அனுராக் தாக்குரின் ஆதரவாளர்கள், 'ஒரு சில மூத்த தலைவர்களின் பெயர்களும் போட்டியில் உள்ளன. ஆனாலும், கட்சியின் அடுத்த தலைவர் எங்க ஆளு தான்; அதில் மாற்றமில்லை...' என, திட்டவட்டமாக கூறுகின்றனர்.

