PUBLISHED ON : மே 31, 2026 12:13 AM

'எம்.பி.,யாக இருந்து சாதிக்க முடியாததை, சபாநாயகராக இருந்து சாதித்து விட்டார்...' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பற்றி பெருமிதத்துடன் கூறுகின்றனர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா லோக்சபா தொகுதி மக்கள்.
ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஓம் பிர்லா முதல் முறையாக பா.ஜ., சார்பில் கோட்டா தொகுதியில், 2014ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது அவர், 'என் தொகுதியான கோட்டா வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இங்கு, விளையாட்டு வீரர்களின் வசதிக்காக எந்த ஒரு பெரிய விளையாட்டு அரங்கமும் இல்லை. எனவே, நல்ல விளையாட்டு அரங்கத்தை கட்டித் தர வேண்டும்...' என, மத்திய -- மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த விளையாட்டுத் துறை அமைச்சர்களிடம் இதை வலியுறுத்தி வந்தார். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., அரசு இருந்தாலும், ஓம் பிர்லாவின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
திடீர் திருப்பமாக, 2019ல் லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஏழு ஆண்டுகளில், கோட்டா மாவட்டத்தில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தன. தற்போது, சர்வதேச தரத்திலான ஏழு விளையாட்டு அரங்கங்கள், கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன.
கோட்டா தொகுதி மக்களோ, 'நினைத்ததை நடத்திக் காட்டி விட்டார், ஓம் பிர்லா...' என, உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
