PUBLISHED ON : அக் 11, 2026 12:00 AM

‘பட்ட காலிலேயே படும் என்பது சரியாகத் தான் இருக்கிறது...’ என புலம்புகிறார், கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில், காங்.,கைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், மா.கம்யூ., கட்சியின் பினராயி விஜயன், 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.
அப்போது, பினராயி விஜயனின் மகள் வீணா, கர்நாடக மாநிலம் பெங்களூரில், ‘சாப்ட்வேர்’ நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்திற்கு, கேரளாவின் கொச்சியில் செயல்படும் சி.எம்.ஆர்.எல்., என்ற தாது மணல் நிறுவனம் 2.78 கோடி ரூபாயை முறைகேடாக கொடுத்தது, வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மா.கம்யூ., ஆட்சி நடந்தபோதே, இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியது. ஆட்சி மாறிய நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் வீணாவின் கணவரான முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய, கேரள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
‘பினராயி விஜயனுக்கு 81 வயதாகி விட்டது. இந்த வயதில் அவரால் கோர்ட் படிகளில் ஏறி இறங்க முடியுமா? குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த தவறால், பினராயி விஜயனின் நிம்மதி போய் விட்டதே...’ என, அவரது விசுவாசிகள் வருத்தப்படுகின்றனர்.
