PUBLISHED ON : மார் 31, 2026 03:43 AM

'பாவம், ஒருமுறையாவது முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என நினைக்கிறார்; ஆனால், தலைவிதி எப்படியோ, அப்படித் தானே நடக்கும்...' என, பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், அகாலி தளம் கட்சி தலைவருமான சுக்பீர் சிங் பாதலை, அந்த மாநில மக்கள் கிண்டலடிக்கின்றனர்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., அகாலி தளம் ஆகிய கட்சிகளிடையே, நான்கு முனை போட்டிக்கு வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
அகாலி தளம் தலைவராக உள்ள சுக்பீர் சிங் பாதல், பஞ்சாப் முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதலின் மகன். பிரகாஷ் சிங் பாதல், 18 ஆண்டுகள் பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார். தந்தையின் இறப்புக்கு பின், கட்சி தலைமை பதவியை ஏற்ற சுக்பீர் சிங் பாதலுக்கு, இன்னும் முதல்வராக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, இப்போதே தயாராகி விட்டார், சுக்பீர் சிங் பாதல்.
பஞ்சாபில், சீட்டாட்டம் மிகவும் பிரபலம். இதை மனதில் வைத்து, 'நான் முதல்வரானால், பஞ்சாபில் உள்ள மூத்த குடிமக்களுக்கு சீட்டாட்ட போட்டியை நடத்துவேன். பல சுற்றுக்களாக போட்டியை நடத்தி, இறுதிப் போட்டியில் வெற்று பெரும் அணிக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு தருவேன்..' என, அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மக்களோ, 'அரசியல்வாதிகளின் பதவி ஆசை, விபரீதத்தை ஏற்படுத்தி விடும் போலிருக்கிறதே...' என, கவலைப்படுகின்றனர்.
