PUBLISHED ON : பிப் 14, 2026 01:22 AM

'முக்கியமான தலைவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது தான், இவர்களது நோக்கமாக உள்ளது...' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்களை விமர்சிக்கின்றனர், பா.ஜ.,வினர்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, சமீபத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீசை அளித்தனர்.
அதில், 'ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கு மட்டும் பேச வாய்ப்பு அளிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேச அனுமதி மறுக்கிறார். பிரதமர் மோடியை தாக்க முயற்சித்ததாக பெண் எம்.பி.,க்கள் மீது அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்.
'எனவே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்கிறோம். இது தொடர்பாக, சபையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்...' என, குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டு, முற்றிலும் பொய் என சீறுகின்றனர், பா.ஜ.,வினர். 'ஏற்கனவே, ராஜ்யசபா தலைவராக இருந்த, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதனால், அவர் கடும் மன உளைச்சல் அடைந்தார்.
'இப்போது, ஓம் பிர்லாவுக்கு எதிராக மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடிப்போம்...' என்கின்றனர், பா.ஜ., - எம்.பி.,க்கள்.

