PUBLISHED ON : செப் 19, 2026 01:18 AM

'எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு; ஆளுங்கட்சியாக மாறிய பின், வேறொரு பேச்சு...' என வருத்தப்படுகின்றனர், ஆந்திர மாநில மக்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார்.
அப்போது, அரசை விமர்சிப்பவர்கள் மீது, போலீசாரை ஏவி விட்டு, அடக்குமுறையை கையாண்டதாக ஜெகன்மோகன் ரெட்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
'இந்த அடக்குமுறை ரொம்ப நாள் தாக்குப்பிடிக்காது; ஆட்சி மாறும்...' என, ஆவேசமாக தெரிவித்தார், சந்திரபாபு நாயுடு. அதற்கு பின், 2024ல் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது; சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.
இப்போது, அடக்குமுறையை ஏவுவதாக, சந்திரபாபு நாயுடு மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுங்கட்சியை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை, போலீசாரை பயன்படுத்தி, பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தங்களுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகளை நீக்குவதற்காக, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம், தங்களை அமெரிக்க போலீசார் என, ஆந்திர போலீசார் பொய்யாக அடையாளப்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஆந்திர மக்களோ, 'ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை...' என்கின்றனர்.
