PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

'இலை மறை காயாக இருக்கும் பிரச்னை எப்போது வெடித்து சிதறப் போகிறதோ தெரியவில்லை...' என, ராஜஸ்தான் பா.ஜ.,வில் நடக்கும் கோஷ்டி பூசல் குறித்து கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள்.
ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதுமே, அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியா தான், முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என, அனைவரும் நினைத்தனர்.
ஆனால், புதுமுகமான பஜன்லால் சர்மாவை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது, பா.ஜ., மேலிடம். அன்று முதலே, ராஜஸ்தான் பா.ஜ.,வில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஒரு கோஷ்டியும், வசுந்தரா தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த உட்கட்சி மோதல் வெளியில் அதிகம் தெரியா விட்டாலும், மறைமுகமாக தொடரவே செய்கிறது. சமீபத்தில், சட்டசபையில் கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
வசுந்தரா கோஷ்டியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு தான், இந்த கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டதாக தகவல் பரவியது. இதனால், வசுந்தராவும், அவரது ஆதரவாளர்களும், முதல்வர் பஜன்லால் சர்மா மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
'இவர்கள் கோஷ்டி பூசலை கட்சி மேலிடம் சரி செய்யவில்லை என்றால், நிலைமை மோசமாகி விடும்...' என்கின்றனர், பா.ஜ., தொண்டர்கள்.