PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

'இந்த முறை கோட்டை தகர்ந்து விடும் போலிருக்கிறதே...' என கவலையில் உள்ளனர், மத்திய பிரதேச மாநில காங்., கட்சியினர்.
இங்கு, முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான,பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத், இங்குள்ள சிந்த்வாரா லோக்சபா தொகுதியில், ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளார்.
இப்போதும் இந்த தொகுதி, கமல்நாத் குடும்பம் வசம் தான் உள்ளது. அவரது மகன் நகுல் நாத், எம்.பி.,யாக உள்ளார். சிந்த்வாரா தொகுதி காங்கிரசின் கோட்டை என்பதை விட, கமல்நாத்தின் கோட்டை என்றே கூறலாம்.
இந்த கோட்டையை தகர்ப்பதற்கு பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். கமல்நாத்தை வளைத்து விட்டால், தொகுதியை கைப்பற்றி விடலாம் என, காய் நகர்த்தி வந்தனர்.
முதலில் அதற்கு சம்மதித்த கமல்நாத், பின் தயக்கம் காட்டி, பின் வாங்கி விட்டார். ஆனால் அவரது மகன் நகுல், எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.,வுக்கு தாவ தயாராகி வருகிறார்.
இதை தடுத்து நிறுத்துவதற்கு நகுலின் மனைவி பிரியா வாயிலாக காங்., மேலிடம் முயற்சித்து வருகிறது. பிரியாவின் தந்தை, ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்; முன்னாள் உளவுத் துறை அதிகாரி. அவரை வைத்து, நகுலுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியினரோ, 'முட்டுக்கட்டை ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்காது. நகுல் நாத், பா.ஜ.,வுக்கு ஓடி விடுவார்...' என்கின்றனர்.

