PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

'இவர்களது பஞ்சாயத்து எதில் போய் முடியும் என தெரியவில்லை...' என, மேற்கு வங்க கவர்னர் அனந்த போஸ், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுக்கு இடையேயான மோதல் பற்றி கவலைப்படுகின்றனர், அந்த மாநில மக்கள்.
கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
மாநில அரசின் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவதாக, மம்தா புகார் கூறி வருகிறார். 'கவர்னருக்கு உரிய மரியாதையை மாநில அரசு கொடுப்பது இல்லை' என, அனந்த போஸ் கூறுகிறார்.
இந்நிலையில், மாநில அரசின் ஆலோசனையை கேட்காமல், பல்கலைகளுக்கான துணைவேந்தர்களை கவர்னர் நியமித்ததாக, மம்தா கூறினார். ஆனால், அதை அவர் பொருட்படுத்த வில்லை.
இதையடுத்து, தன் அரசியல் வேலையை காட்டத் துவங்கியுள்ளார், மம்தா. கவர்னரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களை வளைத்து, அவர்கள் பதவியிலிருந்து விலகினால், அரசியலில் பெரிய பதவி தருவதாக ஆசை காட்டத் துவங்கியுள்ளார்.
மம்தாவின் வியூகம் ஓரளவுக்கு வெற்றியை தந்துள்ளது. ஜாதவ்பூர் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர், திரிணமுல் கட்சியினருடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து அவரை, அவசரம் அவசரமாக பதவியிலிருந்து நீக்கியுள்ளார், கவர்னர். இதைப் பார்த்த மேற்கு வங்க பொதுமக்கள், 'அரசியலை கடந்து, கல்வி நிலையங்களிலும் இவர்கள் மோதல் நீண்டு விட்டது. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை...' என, கவலைப்படுகின்றனர்.