PUBLISHED ON : டிச 13, 2025 12:00 AM

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு - எனும்
தெய்வப் புலவனுக்கு விளக்கமாய் திகழும் தினமலருக்கு பவள விழா ஆண்டு.
காலைப் பொழுதில் தேநீரால் மகிழ்வதைக் காட்டிலும், தினமலர் நாளிதழோடு மனம் நிறைபவர்கள் ஏராளம்.
துணிவான மற்றும் ஆர்வத்தை துாண்டும் தலைப்புகள். வெளிநாட்டு, தேசிய, மாநில, உள்ளூர் மற்றும் வணிக செய்திகளுக்கு உரிய சமமான முக்கியத்துவம். இவை அனைத்து தரப்பினரிடமும் என்றென்றும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
தினமலரோடு தொடர்பு என் கல்லுாரி காலத்திலிருந்தே உண்டு. மதுரை காவல் கண்காணிப்பாளராக இருந்த போது ஒரு நேரடித் தொடர்பு. இன்னொரு மாவட்டத்தில் ஒரு துணை கண்காணிப்பாளர், ஒரு பொது நிகழ்வில் அன்று நடைபெற்ற சூழ்நிலையால், தினமலர் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவை உடைத்துவிட்டார். அந்த துணை கண்காணிப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.
இந்த புகாரால் அவர் பாதிக்கப்படுவார் என எனக்கு தெரிய வந்ததால், நான் அவரை மன்னித்துவிடும்படி அன்றைய தினமலர் வெளியீட்டாளர் திரு.லட்சுமிபதி அவர்களிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன். அவர் கேட்ட கேள்வி, 'ஒரு காவலர் மீது இப்படி வன்முறை நிகழ்ந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்'? நான் பதில் கூற முடியாமல் உங்களுடைய முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்று கூறி வந்துவிட்டேன். ஆனால், பெருந்தன்மையோடு அந்தப்புகார் திரும்ப பெறப்பட்டுவிட்டது.
திரு.லட்சுமிபதி அவர்களோ அல்லது நானோ அந்த துணை கண்காணிப்பாளரை இன்று வரை பார்த்ததில்லை.
கோவை மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்தபோது, எப்போதாவது, காவல் துறை நிலைப்பாடு குறித்து கருத்து கேட்காமல் செய்திகள் வெளியாகிவிடும். உடனே, இது குறித்து காவல் துறையின் நிலைப்பாட்டை தினமலர் கவனத்துக்கு கொண்டு சென்றால். அவையும் முன்னிறுத்தப்படும்.
அரசு விளம்பரங்கள் நாளிதழ் தொழிலை இலகுவாக்கும். அதற்கு அரசு எப்படி இருந்தாலும் இணக்கம் கொள்ள வேண்டும். ஆனால், வாசகரை மட்டுமே நம்பி நடை போடும் தினமலர் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் ஒன்றும் புதிதில்லை. அது போன்றே தினமலர் எனும் ஆல மரத்துக்கும் ரணங்கள் எல்லாம் புதிதில்லை. காரணம், சமரசமில்லா சத்தியப்பாதை.
அரசியலும் அதிகாரமும் கொஞ்சமாவது சரி செய்து கொள்ளப்படுகிறது என்றால், அன்று வந்த 'டீ கடை பெஞ்ச்' காரணமாக இருக்கும். கீழ்த்தரமில்லாத 'கிசு கிசு'இதன் இன்னொரு சிறப்பு.
நெஞ்சில் உரமும், நேர்மை திறனும் இது போல் ஏதுமில்லை. மங்காத தமிழ் போல் தினமலர் நாளிதழ் என்றென்றும் பெரும் புகழோடு திகழ வாழ்த்துகிறேன்.
- ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ்., (ஓய்வு)
முன்னாள் டி.ஜி.பி மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் தமிழ் நாடு காவலர் வீட்டுவசதி நிறுவனம்

