/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
என்னோடு பேசும் உற்றத்தோழன் 'தினமலர்'
/
என்னோடு பேசும் உற்றத்தோழன் 'தினமலர்'
PUBLISHED ON : டிச 14, 2025 12:00 AM

'தினமலர்' நாளிதழை நான் பல ஆண்டு காலமாக படித்து வருகிறேன். எப்போது படிக்கத் துவங்கினேன் என்பது கூட நினைவில்லை. நாட்கள் செல்லச் செல்ல காலையில் என்னோடு பேசும் உற்றத்தோழனாக, 'தினமலர்' அமைந்து விட்டது.
பாகுபாடின்றி எல்லா செய்திகளையும் தாங்கி வந்தாலும் 'தினமலர்' அதற்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் ரசனைக்குரியது. எந்த செய்தி மக்கள் மனதில் நன்றாகப் பதிய வேண்டுமோ, நல்லுணர்வை ஏற்படுத்துமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தியை கூறுவது 'தினமலர்' நாளிதழின் தனிச்சிறப்பு.
எப்பொழுதும் மக்களுடைய முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் வேளாண்மை, தொழில் வளர்ச்சி, மருத்துவம், காலத்துக்கேற்ற கல்வி, விளையாட்டு போன்ற பல துறைகளிலும் அக்கறை காட்டி வருவது தினமலருக்குரிய பாங்கு.
திங்களன்று வெளிவரும் 'பட்டம்' பக்கம் தவிர, மாணவர் பதிப்பாக வரும் 'பட்டம்' என்ற துணை இதழ் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. இந்த மாணவர் இதழை பல ஆயிரம் பள்ளிகளுக்கு போய்ச்சேர்க்கும் 'தினமலர்' நாளிதழின் முயற்சி பாராட்டத்தக்கது.
அதேபோல், வாரமலர் பகுதியில் பிரசுரிக்கப்படும் 'திண்ணை' மிகவும் சுவாரஸ்யமான பகுதி. அதில் பகிரப்படும் அரிய தகவல்கள் மிகவும் வியக்கத்தக்க ஒரு களஞ்சியம். அவற்றையெல்லாம் தொகுத்து அரசியல், நிர்வாகம், கலை, இலக்கியம், ஆன்மிகம், தொழில் போன்ற பல தலைப்புகளிலோ அல்லது இந்த செய்திகள் சம்பந்தப்பட்ட தலைவர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் பெயர்களிலோ நுால்களாக வெளியிட 'தினமலர்' முயற்சித்தால், அவை மக்களுக்கு மிகவும் பயன்படும் என்பது எனது கருத்து.
ஞாயிற்றுக்கிழமை வரும் வரி விளம்பர பகுதியில், 'புதிய வாய்ப்பு' என்ற தலைப்பில் 'மேக் இன் இந்தியா'வை ஊக்குவிக்கும் விதத்தில் வெளியிடப்படும் தகவல்கள் குறு, சிறு தொழில்களை ஊக்குவிக்கும் மிகச்சிறந்த முயற்சியாகும்.
ஊடகங்களின் கடமை தகவல் கொடுப்பது மட்டுமல்ல, அவற்றை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, மக்களை வழிநடத்திச் செல்லும் கடமை, நல்ல ஊடகங்களுக்கு உண்டு. அதற்கு, 'தினமலர்' மிகச்சிறந்த முன்னுதாரணம்.
தினமும் மலரும் இந்த மலர், காலமெல்லாம் மலர என் வாழ்த்துக்கள்.
- ஏ.வி.வரதராஜன்
நிறுவனர், ஏ.வி.வி,குழுமம்புல் மெஷீன்ஸ், ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ்,ஸாண்ட்பிட் பவுன்ட்ரீஸ்

