PUBLISHED ON : டிச 15, 2025 03:02 AM

'இது என்ன வம்பாக இருக்கிறது...' என, பஞ்சாப் மாநில பா.ஜ.,வில் நடக்கும் கோஷ்டி பூசலை பார்த்து, கவலையில் ஆழ்ந்துள்ளனர், அந்த கட்சியின் மேலிட தலைவர்கள்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., மேலிடம் இப்போதே தயாராகி வருகிறது.
'அண்டை மாநிலங்களான டில்லி, ஹரியானாவில் ஆட்சியை பிடித்தது போல், பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.
இதற்காக, பலமான கூட்டணி அமைப்பது குறித்து, பேச்சு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, தங்களுடன் கூட்டணியில் இருந்த அகாலி தளம் கட்சியை, மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேச்சு நடத்துகின்றனர்.
காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு வந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், சுனில் ஜாக்கர் போன்றவர்கள், அகாலி தளத்தை கூட்டணியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே நேரம், அகாலி தளத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு தாவிய பர்மீந்தர் பிரார், மஜிந்தர் சிர்சா போன்ற தலைவர்கள், 'எந்த காரணத்திற்கும், அகாலி தளத்துடன் கூட்டணி அமைக்கக் கூடாது...' என, போர்க்கொடி துாக்கி வருகின்றனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பா.ஜ., தலைவர்கள், 'பிற கட்சியில் இருந்து நம் கட்சிக்கு வந்தவர்கள், இரண்டு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர்; இது, நம் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது இல்லையே...' என, கவலைப்படுகின்றனர்.

