PUBLISHED ON : டிச 16, 2025 03:04 AM

'மூன்றாவது முறை முதல்வராக முடியாது போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில் நடக்கும் சட்டசபை தேர்தல்களில், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய அணிகளே மாறி மாறி ஆட்சியமைப்பது வழக்கம்.
எந்த கட்சியும் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை பிடித்தது இல்லை என்ற அரசியல் வரலாறு, கேரளாவில் இருந்தது. ஆனால், 2021 சட்டசபை தேர்தலில் இதை முறியடித்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சி அமைத்தார், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பினராயி விஜயன்.
அடுத்த சில மாதங்களில், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், மூன்றாவது முறை வெற்றியை ஈட்ட, முதல்வர் பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி படுதோல்வி அடைந்தது; காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில், 50 வார்டுகளை கைப்பற்றி, பா.ஜ., சாதனை படைத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பதவி ஏற்க முடியாதோ என்ற கவலையில் இருக்கிறார், முதல்வர் பினராயி விஜயன்.

