PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

'அநியாயத்துக்கு விசுவாசமாக இருப்பவர்களை மட்டும் அரசியலில் நம்பக் கூடாது. அவர்கள் தான், முதலில் காலை வாரி விடுவர்...' என, பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான, பகவந்த் சிங் மான் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள்.
பஞ்சாபில், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 117 தொகுதிகளில், ஆம் ஆத்மி, 92ல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தனக்கு மிகவும் விசுவாசமான பகவந்த் சிங் மானை முதல்வராக நியமித்தார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
பகவந்த் சிங் மான் அடிப்படையில் அரசியல் வாதியே அல்ல; மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி, பஞ்சாப் மக்களிடம் பிரபலமானவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து, ஆட்சியை பா.ஜ.,விடம் இழந்தது. இதனால், கெஜ்ரிவாலின் செல்வாக்கு சரியத் துவங்கியுள்ளது.
இதையடுத்து, கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வராகலாம் என்ற பேச்சு எழுந்தது. சுதாரித்துள்ள பகவந்த் சிங் மான், ஒட்டுமொத்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களையும் தன் பக்கம் வளைத்து, பா.ஜ., அல்லது காங்கிரசில் ஐக்கியமாகி விடலாம் என திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதை கூர்ந்து கவனித்து வரும் ஆம் ஆத்மி தொண்டர்கள், 'கட்சியில் பல முக்கியமான தலைவர்கள் இருக்கும்போது, முதல்வர் பதவியை பகவந்த் சிங் மானுக்கு துாக்கி கொடுத்த கெஜ்ரிவாலுக்கு, இது தேவை தான்...' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.