PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

'வயதான காலத்தில், சிறையில் அடைத்துசித்ரவதை செய்வரோ...' என கவலைப்படுகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ்.
இங்கு, முதல்வர்ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ்ஆட்சி நடக்கிறது. சந்திரசேகர ராவ் தலைமையிலான முந்தைய அரசில், ஹைதராபாதில் கார் பந்தயம் நடந்தது.
இந்த பந்தயத்தை நடத்துவதற்கான ஒப்பந்தம், ஐரோப்பியநாடான பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தனியார்நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுஇருந்தது. இதற்காக,அந்த நிறுவனத்துக்கு தெலுங்கானா அரசு சார்பில், 55 கோடி ரூபாய் தரப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனத்துக்கு இதுபோல பணம் கொடுத்தால், அதற்கு நம் ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால்,சந்திரசேகர ராவ் அரசு, ரிசர்வ் வங்கியிடம்அனுமதி பெறாமல், அந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தைத் தான், ரேவந்த் ரெட்டி அரசு தற்போது துாசி தட்டியுள்ளது. சந்திரசேகர ராவ் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், கலக்கம் அடைந்துள்ள பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர், 'ஏற்கனவே தொடர் தோல்விகளால், நம் தலைவர் துவண்டு போயிருக்கிறார். இதில் சிறைவாசம் வேறா; 70 வயதில் இந்த கொடுமையை அவரால் தாங்க முடியுமா...' என, கவலைப்படுகின்றனர்.